ஸ்ரீ:


பெரியாழ்வார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

“பகல்பத்து முதல்நாள்”  (18-12-2009)
1) திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பிறகு நாதமுனிகள் காலம்வரை (கி.பி.823-918) இராப்பத்துத் திருநாளாகிய திருவாய்மொழித் திருநாள் மட்டுமே நடைபெற்று வந்தது.
2) நாதமுனிகள் யோகக்கலை பயின்றவர். நம்மாழ்வாரை யோக தசையில் கண்டு நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களையும் அவரிடம் கேட்டு அதைத் தொகுத்தவர்.
3) திருவாய்மொழிக்கு அமைந்துள்ள ஏற்றம்போலே மற்றைய ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்யப்பிரபந்தங்களுக்கும் ஏற்றமளித்திடும் வண்ணம் நாதமுனி காலந்தொடங்கி பகல்பத்துத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
4) இந்தப் பத்து நாட்களில் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள் புடைசூழ முதலாயிரம் மற்றும் இரண்டாமாயிரம் ஆகியவற்றில் அமைந்துள்ள மொத்தம் 947 + 1134 = 2081 பாசுரங்களை அரையர்கள் இசையுடன் பாடக் கேட்டு மகிழ்வார்.
5)பகல்பத்து முதல்நாள் காலை பெரியபெருமாள் திருமுன்பு கர்ப்பக்ருஹத்தில் திருப்பல்லாண்டு அரையர்களால் இசைக்கப்படும்.
6) பகல்பத்து உத்ஸவத்தில் கீழ்க்கண்ட வைபவங்கள் தினந்தோறும் நடைபெறும்.
1) கருவறையிலிருந்து புறப்பாடு. 2) அர்ஜுன மண்டபத்தில் ஆழ்வார் ஆசார்யர்களுக்கு மரியாதை 3)அரையர் ஸேவை. 4) நிவேதன விநியோகங்கள். 5) ஆழ்வார் ஆசார்யர்கள் ஸ்தோத்ர பாட கோஷ்டியோடு தத்தம் ஸந்நிதிகளுக்கு எழுந்தருளல். 6) நம்பெருமாள் பகல்பத்து மண்டபத்திலிருந்து புதிய திருவா பரணங்கள் கொண்டை  அணிந்துகொண்டு புறப்பாடு. 7) வழிநடை உபயங்கள் கண்டருளல். 8) ராஜ மஹேந்த்ரன் திருச்சுற்றிலுள்ள மீனாட்சி மண்டபத்தில் தீர்த்த கோஷ்டி  8) பத்தி உலாத்துதல். 9) மேலைப் படியில் படியேற்றம். 10) திருவந்திக்காப்பு கண்டருளல். 11) ஸர்ப்பகதியில் கருவறைக்குள் எழுந்தருளதல்.
7) நம்பெருமாள் திருவாபரணங்கள் பலவற்றை ஒவ்வொருநாளும் அணிந்து கொண்டு கருவறையில் இருந்து ஸிம்மகதியில் புறப்பாடு கண்டருளுவார்.
8) சந்தன மண்டபத்திற்கு எழுந்தருளியவாறே இரண்டடி ஒய்யார நடையிட்டு தன்னுடைய பரத்வத்தை வெளிப்படுத்துகிறார்.
9) ஸ்ரீரங்கநாதன்தான் வாமன, திருவிக்ரம, வராஹ அவதாரங்களை எடுத்தவன் என்பதை இந்தப் புறப்பாடு உணர்த்துகிறது.
10) மேலைப்படியில் ஸ்தலத்தார்களுக்கும், தீர்த்த மரியாதை உரிமையுடையோர்க்கும் மரியாதைகள் நடை பெறும். மேலைப்படியைவிட்டு நம்பெருமாள் இறங்கியபிறகு உத்தமநம்பிக்கும் தேவஸ்தான அதிகாரி களுக்கும் சந்தன உருண்டை ஸாதிக்கப்படும். இந்தச் செயல்மூலம் அவர்கள் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யத்தைச் சரிவரச் செய்வதாகப் பிரமாணம் செய்து கொடுக்கிறார்கள்.
11) ஸேனை முதலியாருக்கு மரியாதைகள் ஆனபிறகு, கிளிமண்டபத்தில் படியேற்ற ஸேவையாகும். அப்போது அரையர்கள் தாளமிசைப்பர். இந்தப் படியேற்றம் ஸுஷûம்நா நாடியில் குண்டலிநீ சக்தி ஆறு ஆதாரங் களையும் கடந்து ஸஹஸ்ரார சக்ரம் போய்ச் சேருவதைக் குறிக்கிறது. ஆறாவது ஏழாவது படிகளில் நம்பெருமாள் ஒரு புறமிருந்து, மற்றொருபுறம் திரும்பி ஸேவை சாதிப்பதால் திருமங்கையாழ்வார் பாசுரமாகிய “நீணிலாமுற்றத்து நின்றிவள் நோக்கினாள் காணுமோ கண்ணபரமென்று காட்டினாள்” (பெரியதிருமொழி 8-2-2)என்பதின் அர்த்தம் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.
12) சுரதாணி எனப்படும் துலுக்கநாச்சியார் ஸந்நிதிக்கு எதிரில் படியேற்ற ஸேவை ஸாதித்து, அரையர்கள் கொண்டாட்டமானபிறகு, அர்ஜுன மண்டபத்திற்கு நம்பெருமாள் எழுந்தருளியிருப்பார். திருப்பல்லாண்டில் “பல்லாண்டு பல்லாண்டு”, “அடியோமோடும்” ஆகிய 2 பாசுரங்களுக்கும் அபிநயம் நடைபெறும்.
13) பெரியாழ்வார் திருமொழியிலிருந்து பாசுரங்கள் ஸேவிக்கப்பட்டு வெண்ணெய் விழுங்கி (பெரியாழ்வார் திருமொழி 2-9-1) பதிகம் ஈறாக மொத்தம் அன்றையதினம் 224 பாசுரங்கள் ஸேவிக்கப்படும். (திருப்பல்லாண்டு 12, பெரியாழ்வார் திருமொழி 212)
தொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்               ***

Advertisements