Tags

, , , , ,

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபட்டர் திருவடிகளே சரணம். ஸ்ரீமத் வரவரமுநயே நம:
“திருநெடுந்தாண்டகத் திருவிழா”

1) திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருடைய நாலு பிரபந்தங்களாகிய திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவாய்மொழி ஆகியவற்றிற்கு அங்கங்கள் போல ஆறு திவ்யப்பிரபந்தங்களை அருளிச் செய்தார். அவற்றில் ஒன்று திருநெடுந்தாண்டகம் என்னும் திவ்யப்பிரபந்தமாகும்.
2) திருநெடுந்தாண்டகம் “தாண்டகம்” என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது. இது 30 பாசுரங்கள் கொண்டது.
3) திருநெடுந்தாண்டகத்தில் முதல் 10 பாசுரங்கள் ஆழ்வார் தாமான தன்மையிலும் அடுத்த 10 பாசுரங்கள் ஒரு தாய் தன் மகளைப்பற்றிச் சொல்வதைப் போலவும், இறுதி 10 பாசுரங்கள் தலைமகள் என்னும் நிலையில் திருமங்கையாழ்வார் பெண்ணான தன்மையில் பாடிய பாசுரங்களாகும்.
4) திருநெடுந்தாண்டகம் வேதக்கருத்துக்களை தன்னகத்தே கொண்டதொரு வேதத்துக்கு ஒப்பானதொரு நூலாகும்.
5) திருநெடுந்தாண்டகம் 21ஆவது பாசுரமான “மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின்தாழ” என்று தொடங்கும் பாசுரத்தில் ஸ்ரீபராசரபட்டர் மிகுந்த ஈடுபாடு கொண்டு விரிவானதொரு விளக்கவுரை அருளிச் செய்துள்ளார்.
6) இராமாநுசருடைய விருப்பப்படி கர்னாடக மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கி வந்த வேதாந்தியான மாதவாசார்யரை கூரத்தாழ்வானின் குமாரரான ஸ்ரீபராசரபட்டர் திருநெடுந்தாண்டகத்தின் விளக்கவுரை கொண்டு அவரைத் தம்முடைய சீடராக்கிக் கொண்டார். இந்த மாதவாசார்யரே நஞ்சீயர் ஆவார்.
7) மற்றைய திவ்யதேசங்களில் பகல்பத்து எனப்படும் விழா மார்கழி மாதம் அமாவாசைக்கு அடுத்த ப்ரதமை தொடங்கி தசமி ஈறாக நடைபெறும். மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி தினமாகும்.
8) திருவரங்கத்தில் மட்டும் ஸ்ரீபராசரபட்டர் வேதாந்தியான மாதவாசார்யரை திருநெடுந்தாண்டகம் கொண்டு திருத்திப் பணி கொண்ட நிகழ்ச்சி பகல்பத்துக்கு முதல்நாள் அரையர்களால் அபிநயித்துக் காட்டப் படுகிறது.
9) “சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லையில்லா அறநெறியாவும் தெரிந்த” இராமாநுசர் காலத்தில்தான் தமிழுக்குத் திருக்கோயில்களில் பெரியதொரு ஏற்றம் அளிக்கப்பட்டது.
10) இயல், இசை , நாடகம் என்னும் மூன்று கூறுகளைக் கொண்டது தமிழ். நாதமுனிகள் வழித் தோன்றல்களான அரையர்கள் கையில் தாளத்தோடும், இசையோடும் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களை பெரியபெருமாள் திருமுன்பு இசைத்து தமிழுக்கு ஏற்றம் அளிக்கும் பகல்பத்து, இராப்பத்து விழாவைத் திருநெடுந்தாண்டக தினத்தன்று தொடங்கி வைக்கின்றனர்.
11) அரையர்கள் தம் திருமாளிகையில் இருந்து குல்லாய் தரித்துக் கொண்டு பெரியபெருமாளுடைய காப்பந்தம், திருச்சின்னம் ஆகியவற்றுடன் புறப்பட்டு உடையவர் ஸந்நிதி, திருவரங்கப் பெருமாள்அரையர் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபார்த்தஸாரதி ஸந்நிதி, நம்மாழ்வார் ஸந்நிதி ஆகிய இடங்களுக்குச் சென்று ஸேவித்தபிறகு சந்தன மண்டபத்தில் ஜயவிஜயாள் ஆகிய துவாரபாலகர்களுக்கு அருகில் அமர்ந்திருப்பர்.
12) பெரியபெருமாளுக்கு வெள்ளைச்சரம், மாலைகள் சாற்றப்பட்டபிறகு தேங்காய்த்துருவல் அமுது செய்விக்கப்படும்.
13) “கோயிலுடைய பெருமாள் அரையர்” “வரந்தரும் பெருமாள் அரையர்” என்றோ அல்லது “மதியாத தெய்வங்கள் மணவாளப்பெருமாளரையர்”, “நாதவினோத அரையர்” என்றோ அருளப்பாடு ஸாதிக்கப்படும். (பகல்பத்து, இராப்பத்து விழாக்காலங்களில் அரையர்களுக்கான அருளப்பாடு மேற்கண்டவாறே ஸாதிக்கப்படும்.)
14) அரையர்கள் திருக்கரங்களில் இருக்கும் “நாதமுனி” என்றழைக்கப்படும் தாளங்கள் பெருமாள் திருவடிகளில் சேர்ப்பிக்கப்படும். அரையர்களுக்கு ஸ்தானீகர் தீர்த்தம், சந்தனம், தொங்கு பரியட்டம், மாலை ஆகியவற்றை ஸாதிப்பார்.
15) பிறகு கர்ப்பக்ருஹத்தில் மேற்குப்பகுதியில் இருந்துகொண்டு “பொங்குசீர் வசனபூடணமீந்த உலகாரியன் போற்றிடத்திகழும் பெருமாள்! போதமணவாளமாமுனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்!” என்ற கொண்டாட்டங்களைச் சொல்லி திருநெடுந்தாண்டகம் முதல்பாட்டு “மின்னுருவாய்” என்பதை பல தடவை இசைப்பர்.
16) அரையர்கள் சந்தன மண்டபத்திற்கு எழுந்தருளியபிறகு “மின்னுருவாய்” என்று தொடங்கும் முதல் பாசுரத்தினை இசையுடன் அபிநயம் செய்வர்.
17) முதற்பாட்டிற்கு பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யான அவதாரிகைகளும், முதல் பாட்டிலிருந்து 11ஆவது பாட்டான “பட்டுடுக்கும்” வரை தம்பிரான்படி வ்யாக்யானமும் ஸேவிக்கப்படும்.
18) திவ்யப்பிரபந்தப் பாசுரங்களுக்கு நாதமுனிகள் தொடக்கமான அரையர்கள் குலத்தில் உதித்தோர் எழுதி வைத்த வ்யாக்யானத்திற்குத் தம்பிரான்படி என்று பெயர். இவை அச்சு வடிவில் இல்லை. அரையர்களிடம் உள்ள ஓலைச் சுவடிகளில் பாரம்பரியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
19) திருநெடுந்தாண்டகத்திற்கு அமைந்துள்ள தம்பிரான்படி விரிவுரை சொல்லழகும் பொருளழகும் கொண்ட கருத்தாழமிக்க சொற்றொடர்களாகும். இவற்றை கேட்கக்கேட்க உள்ளத்திலே மகிழ்ச்சி பொங்கும். திவ்யப்பிரபந்தச் சொற்கள் பின்னிப்பிணைக்கப்பட்டு சந்தத்தோடு அவை அரையர்களால் ஸேவிக்கப்படும் போது கேட்போர் உள்ளத்தில் திவ்யப்பிரபந்தத்தின் சொல்லழகு புலப்படும்.
திருவரங்கத்தில் திருநெடுந்தாண்டகத் திருவிழா மார்கழி முதல்நாள் 17-12-2009 அன்று நடைபெறும்.
தொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்

Advertisements