ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமாநுசர் வைபவம்-1

1. எம்பெருமானார் அவதார திருநக்ஷத்ரம்-விக்ருதி வருஷம், சித்திரை 7ஆம் நாள், (20-4-2010) அன்று கொண்டாடப்படவுள்ளது.

2. சித்திரை 1ஆம் நாள்  (14-4-2010) உடையவர் உத்ஸவம் ஆரம்பமாகி, ஏழு நாட்களுக்கு நடைபெறும்.

3. உடையவர் உத்ஸவத்தின் 6ஆம் நாள் ‘பொலியன் சிறப்பு’ என்ற வைபவம் நடைபெறும்.

4. காரேய் கருணை இராமானுசன்! குணம் திகழ் கொண்டல் இராமானுசன்!     நல்லார் பரவும் இராமானுசன்! திக்குற்ற கீர்த்தி இராமானுசன்! என்று திருவரங்கத்து அமுதனார் பரவிப்போற்றிய இராமானுசரைப் புகழாதார் யார்?

5. தத்துவ தரிசிகள்; வேத வேதாந்த வித்தகர்கள், வடமொழி விற்பன்னர்கள். தண்டமிழ்ச் சான்றோர்கள்; இலக்கிய மேதைகள்; பொதுவுடைமை வாதிகள்; சமநீதிப் புரட்சியாளர்கள்; தமிழ்ப் பற்றாளர்கள், புதுக்கவிஞர்கள் மனிதநேய மாண்பினர்கள்- என்று இராமானுசரின் வாழ்க்கையை அலசி ஆராயாதவர்களே இல்லை எனலாம்.

6. உலகத்தின் விளிம்புகள் வரை விரிந்த உடையவரின் உயர்ந்த வாழ்க்கையை எழுத்துக்களில் வடித்தவர்களில் காலத்தினால் முற்பட்டவர் வடுகநம்பி என்ற ஆந்திரபூர்ணர்.  இவர் ‘யதிராஜ வைபவம்’ என்ற வடமொழி நூலில் 114 சுலோகங்களில் ஸ்ரீராமாநுஜரின் சரித்திரத்தை எடுத்துரைத்தார். இவர் இராமானுசருக்கு அணுக்கத் தொண்டராக வாழ்ந்தவர்.

7. உடையவர் காலத்திலே வாழ்ந்து அவருடைய குணங்களையும் ஞானத்தின் உயர்வையும் உலகறியச் செய்தவர் திருவரங்கத்தமுதனார். இவர் இயற்றிய இராமானுச நூற்றந்தாதியை இராமானுசரே கேட்டு மகிழ்ந்து அடியார் பெருமக்களை அனுதினமும் அதை அநுஸந்திக்கும்படி ஆணையும் இட்டருளினார்.

8. இராமானுச நூற்றந்தாதி, கட்டளைக் கலித்துறை யாப்பில் 108 பாடல்களைக் கொண்டது.

9. ‘ப்ரபந்ந காயத்ரி’ என்று புகழப்படும் பெருமை வாய்ந்தது.

10. அமுதனாரையும் வடுகநம்பியையும் போல் இராமானுசர் காலத்திலேயே வாழ்ந்த ‘கருடவாஹன பண்டிதர்’ என்ற வித்வானால் விளம்பப்பெற்றது ‘திவ்யஸூரிசரிதம்’ என்ற வடமொழி நூலாகும். இது ஆழ்வார்களின் வரலாற்றையும் சேர்த்துச் சொல்கிறது. காவியரீதியில் இந்நூல் அமைந்து கற்போரைக் களிப்புறச் செய்கிறது.

11. இராமானுசரின் வாழ்க்கையைத் தெரிவிக்கும் பழமையான குருபரம்பரை நூல் ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்.

12. இந்த நூலை மணிப்ரவாள நடையில் எழுதியவர் நம்பிள்ளையின் சீடரும் துறவியுமான பின்பழகிய பெருமாள் சீயர்.

13. ஆசிரியராகிய நம்பிள்ளையினும் மிக மூத்தவரான இவர் ஆசிரியர்க்கு அணுக்கராய்த் தொண்டுகள் செய்தவர்.

14. இத்தகைய பேரறிவாளர் ஆழ்வார்களின் வரலாற்றையும் ஆசார்யர்களின் வரலாற்றையும் சிறப்பாக இராமானுசரின் வரலாற்றையும் உரைநடையில் நூலாக்கி உதவினார்.

15. இராமானுசரின் வரலாற்றை வடமொழியிற் கூறுகின்ற மற்றொரு பெரிய நூல் ‘ப்ரபந்நாம்ருதம்’ ஆகும். இந்நூலை இயற்றியவர் வடுகநம்பியின் திருவம்சத்திலுதித்தவரான அனந்தாசார்யர் என்பவர்.

16. வடமொழியில் அமைந்த மற்றொரு ஸ்தோத்ர நூல் ‘யதிராஜ ஸப்ததி’ ஆகும். இதனை இயற்றியவர் வேதாந்தாசார்யர் என்ற ஸ்ரீமந் நிகமாந்த தேசிகன் (கி.பி.1268 – 1369).  இது 70 ச்லோகங்களைக் கொண்டது. இதில் இராமானுசரின் புகழைப் பல் வகையிலும் பறைசாற்றுகிறார் ஸ்ரீமந் நிகமாந்த தேசிகன்.

17. ஸ்ரீமணவாள மாமுனிகளால் இயற்றப்பெற்றதாய் வட மொழியில் அமைந்து புகழ் பெற்ற ஓரு நூல் ‘யதிராஜ விம்†தி’ ஆகும். இது 20 ச்லோகங்களில் செவிக்கினிதாகத் தொகுக்கப் பெற்றது. இவரது காலம் (கி.பி.1370 – 1443).

18. ஸம்ஸ்க்ருதத்தில் காவியரீதியில் அமைந்துள்ள மற்றொரு அருமையான நூல் ‘ஸ்ரீராமாநுஜ சம்பு’ ஆகும். இதனை இயற்றியவர் கி.பி.1600இல் வாழ்ந்த கர்க்க கோத்ரத்தில் உதித்தவரான ஸ்ரீராமாநுஜாசார்யர் என்பவர்.

19. வடமொழியில் நாடகப் பாங்கில் இயற்றப்பட்ட ஒருநூல் ‘யதிராஜ விஜயம்’ ஆகும். வாத்ஸ்ய வரதர் என்கிற நடாதூரம்மாள் மரபில் வந்தவரும் சோளசிம்மபுரத்தில் வாழ்ந்தவருமான ஸுதர்சநாசார்யர் என்பவருடைய குமாரர் ‘அம்மாளாசார்யர்’ என்ற மற்றொரு பெயர் கொண்ட வரதாசார்யர் என்பவர். இவரால் இயற்றப்பட்டதே யதிராஜ விஜயம்.

20. குருபரம்பரை என்ற தலைப்பில் ஆசார்யர்களின் வரலாற்றைத் தமிழ்ச்செய்யுள் வடிவில் தெரிவிக்கும் நூல்களும் உள்ளன. அவை (1) கீழையூர் சடகோப தாசர் இயற்றிய அரிசமய தீபம்,(2) வடிவழகிய நம்பிதாசர் இயற்றிய குருபரம்பரை (3) பரமயோகி விலாஸம் (4) பாகை சீதாராமதாசர் இயற்றிய ‘இராமானுச சரிதை’ (5) குருபரம்பரைப் புராணம் (6) கோழியாலம் சப்தம் வங்கீபுரம் ஸ்ரீநிவாஸாசார்யர் இயற்றிய திவ்யசூரி சரிதம்.

21. இத்தனை நூல்களுக்கும் நடுவே தனித்தன்மைகளுடன் விளங்குவது பிள்ளை லோகார்ய ஜீயர் இயற்றிய ‘ராமாநுஜார்ய திவ்ய சரிதை’ என்ற நூல்.

ஸ்ரீ ரங்கநாத சுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர்.             (தொடரும்)

Advertisements