ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

திருவரங்கத்தமுதனார் வைபவம்

1) பங்குனி மாதம் ஹஸ்த நக்ஷத்ரத்தில் மூங்கிற்குடி என்னும் குலத்தில் அவதரித்தவர் திருவரங்கத்தமுதனார். இவருடைய திருநக்ஷத் ரோத்ஸவ உத்ஸவம் 30-3-2010 அன்று நடைபெற்றது.

2) ப்ரபன்ன காயத்ரி என்று கொண்டாடப்படும் ‘இராமாநுச நூற்றந்தாதியை’ அருளிச் செய்தவர் இவர்.

3) கூரத்தாழ்வானால் திருத்திப்பணி கொள்ளப்பட்டவர் அமுதனார்.

4) திருவரங்கத்தமுதனாருடைய அர்ச்சா திருமேனி திருவரங்கம் பெரிய கோயிலினுள் அகளங்கன் திருச்சுற்றாகிய 5ஆம் திருச்சுற்றில் அமைந்துள்ள சக்ரத்தாழ்வார் ஸந்நிதியின் தென்புறம் அமைந்துள்ளது.

5) இராமாநுசருடைய காலத்தில் பெரியகோயில் நம்பி திருவரங்கம் பெரியகோயிலின் உள்துறை நிர்வாஹங்களை மேற்பார்வையிட்டு வந்தார். இவர் இராமாநுசருடைய வருகையை விரும்பாதவராய் அவருக்குப் பல இடையூறுகளைச் செய்து வந்தார்.

6) பெரியகோயில் நம்பியை திருவரங்கத்திலிருந்து வெளியேற்றிட வேண்டும் என்று எண்ணம் கொண்ட இராமாநுசர் கனவில் பெரியபெருமாள் தோன்றி, “பெரியகோயில் நம்பி நீண்ட காலமாக நம்மையே நம்பியிருக்கிறார். இதை மனதில் கொண்டுதிருவுள்ளப்படி செய்தருள்க” என்று கூறி மறைந்தார்.

7) “நம்மிடம் விரோத புத்தியுடன் நடந்து கொள்ளும் பெரியகோயில் நம்பியை வெளியேற்றுதல் பெருமாள் திருவுள்ளத்துக்கு இசைந்ததாகத் தெரியவில்லை. அவரை வைத்துக் கொண்டு நம்மால் காரியம் செய்யப் போகாததாகையால் நாம் காஞ்சிபுரத்துக்கே திரும்பிச் செல்வோம்” என்று கூரத்தாழ்வானிடம் இராமாநுசர் கூறினார்.

8) அதைக்கேட்ட ஆழ்வான் “பெருமாள் இப்படி அருளுகையால் பெரியகோயில்நம்பியை அநுகூலராக்கித் திருவடிகளிலே ஆச்ரயிக்கும்படி பண்ணியருளுவர்” என்று விண்ணப்பம் பண்ண, “அங்ஙனமாயின் நீரே அவரைத் திருத்தும்” என்று உடையவர் நியமித்தருளினார்.

9) ஆழ்வானும் பெரியகோயில் நம்பியை ஆறு மாத காலம் பின்தொடர்ந்து தம்முடைய உபதேசத்தால் இராமாநுசர் திருவடிகளைப் பற்றிடும்படி செய்தார்.

10) இந்தச் செயலை திருவரங்கத்தமுதனார் தாம் இயற்றிய இராமாநுச நூற்றந்தாதியில், “மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும்நம் கூரத்தாழ்வான் சரண்கூடியபின் பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ்பாடி அல்லா வழியைக் கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தமன்றே” என்று குறிப்பிட்டுள்ளார்.

11) தன் தாயார் பரமபதித்தபிறகு அவர் செய்த இறுதிச் சடங்குகளில் 11ஆம் நாளன்று கூரத்தாழ்வானை “நிமர்ந்தரண” ஸ்வாமியாக  இருக்கச் செய்யும்படி இராமாநுசரிடம் வேண்டி நின்றார் அமுதனார். அவ்வாறே ஆழ்வானும் நிமந்தரண ஸ்வாமியாய் (ப்ராஹ்மணார்த்தம் என்று கொள்ளப்படும் பிதுர்க்களுக்கான அமுது படைத்தல்) எழுந்தருளினார்.

12) அமுதுண்டபிறகு முடிவில் நான் திருப்தியடைந்தேன் என்று நிமந்தரண ஸ்வாமி சொல்லவேண்டும். அப்போதுதான் அவர் பரமபதித்த தன் தாயாருக்குச் செய்யும் கைங்கர்யம் பூர்த்தியடைந்ததாகக் கொள்ளப்படும்.

13) ஆனால் கூரத்தாழ்வான் அன்றையதினம் ‘நான் திருப்தியடைந்தேன்’ என்ற வார்த்தையைச் சொல்ல மறுத்தார். அதற்கு தேவரீர் திருப்தியடைய வேண்டுமென்றால் அடியேன் என்ன செய்யவேண்டும் என்று வினவினார் அமுதனார். அதற்கு ஆழ்வான் ‘நீர் உம்முடையதான கோயில் நிர்வாஹம், பெரியபெருமாள் திருமுன்பு புராணங்கள் வாசிக்கும் உரிமை, பௌரோஹித்யம் (திருக்கோயில் தொடர்பான வைதிக கார்யங்களை மேற்கொண்டிடும் உரிமை) ஆகியவற்றை எனக்குத் தானமாகத் தரவேண்டும்’ என்று கேட்க, அமுதனாரும் அவ்வாறே அவற்றைத் தானமாகத் தந்தார்.

14) ஆழ்வானும் தாம் அமுதனாரிடமிருந்து பெற்ற இந்தத் தானத்தை உடையவரிடம் ஸமர்ப்பித்திட அவரும் நீரே இன்றுமுதல் புராண படனம் மற்றும் பௌரோஹித்யம் ஆகிய இரண்டையும் செய்து வாரும் என்று நியமித்தருளினார். கோயில் நிர்வாஹத்தை ஆண்டானிடம் கொடுத்தார்.

15) அமுதனார் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபடாது இருக்கக் கண்ட எம்பெருமானார் இவர் இப்படி ஒழிந்திருக்கலாது” என்று திருவுள்ளம் பற்றி பிள்ளை திருவரங்கப்பெருமாள் அரையரிடம் இயற்பா ஸ்ரீகோசத்தை பிக்ஷையாகப் பெற்று “இன்று முதல் ஸந்நிதியில் இயற்பா ஆயிரத்தை நீங்கள் இசைக்கவேண்டா” என்று அரையரை நியமித்து, அமுதனாருக்கு ஓருரு இயற்பாவை ஸாதித்து, ஸந்நிதியில் அரையருக்கு பதில் விண்ணப்பிக்கும்படி நியமித்தார். அப்படி ஸேவிக்கும் நாட்களில் அரையர் பெறும் சிறப்புகள் அனைத்தையும் அமுதனார் பெறும்படி ஏற்பாடும் செய்தருளினார்.

16) இப்படி அமுதனார் இயற்பாவை அரையருக்குப் பதிலாக ஸேவிக்கும்படி திட்டம் செய்தருளின பிறகு, சில நாளைக்குப் பின்பு திருவரங்கத்தமுதனார் எம்பெருமானார் விஷயமாக காயத்ரீ ஜப ஸங்க்கையாலே கலித்துறை நூற்றந்தாதியை விண்ணப்பம் செய்ய, பெருமாள் ஒரு ஸப்தாவரணத்திருநாளிலே உடையவரைத் தம்முடனே கூடவர வேண்டாம் என்று நியமித்தருளி, திருவீதியிலே ஸகல வாத்யங்களையும் நிறுத்தி, ஸ்ரீவைஷ்ணவர்கள் (இந்த நூற்றந்தாதியை) அநுஸந்திக்க கேட்டருளி போரவுகந்தருளினார்.

17) இன்றும் ஸப்தாவரணத்தன்று இராமாநுச நூற்றந்தாதி திருவீதிகளில் ஸேவிக்கப்படும்போது வாத்யங்கள் முழங்கப்படுவதில்லை. மாறாக, நம்பெருமாள் அத்யாபகர்கள் ஸேவித்திடும் இராமாநுச நூற்றந்தாதியை தானும் திருச்செவி சாற்றுவதற்காக அந்த கோஷ்டிக்கு அண்மையில் எழுந்தருளுவார்.

18) திருவரங்கத்தமுதனார் அருளிச் செயல் சொற்றொடர்களுக்குச் சிறப்புப் பொருள் கூறும் திறம் படைத்தவர். இவருடைய விளக்கக் குறிப்புகள் பூர்வர்கள் அளித்துள்ள உரை விளக்கங்களில் இடம் பெற்றுள்ளன.

திருவரங்கம் பெரியகோயில் ரங்கவிலாஸ மண்டபத்திலும் தாயார் ஸந்நிதியிலும் மேற்கண்ட வாசகங்கள் கொண்ட டிஜிடல் டிஸ்ப்லே பேனர் வைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீரங்கம் தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர் ஸ்ரீவைஷ்ணவ்ஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்

***

Advertisements