`                                                  ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

1) திருவரங்கத்தில் கால வெள்ளத்தில் காணாமற்போன ப்ரஹ்மோத்ஸவங்கள் பல. அவற்றில் குறிப்பிடத் தக்கவை ஐப்பசி ப்ரஹ்மோத்ஸவம், (திருவோணத்தன்று திருத்தேரில் எழுந்தருளிய உத்ஸவம்) முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஏற்படுத்தி வைத்த சித்திரை ப்ரஹ்மோத்ஸவம், ஆரவீடு அளியராமராஜா வைகாசி மாதத்தில் பூச நக்ஷத்ரத்தில் ஏற்படுத்தி வைத்த ப்ரஹ்மோத்ஸவம், கிருஷ்ணதேவராயர் தன் பெயரில் ஏற்படுத்தி வைத்த மாசி ப்ரஹ்மோத்ஸவம், புரட்டாசியில் ஆதித்யதேவ உடையார் பெயரில் ஏற்படுத்தி வைக்கப்பட்ட ப்ரஹ்மோத்ஸவம் போன்றவை இவையெல்லாம் இன்று வழக்கொழிந்து விட்டன.
2) கால வெள்ளத்தில் எதிர்நீச்சலிட்டு இன்று நிலை கொண்டிருக்கும் ப்ரஹ்மோத்ஸவங்கள் மூன்று. அவையாவன: சித்திரை விருப்பன்திருநாள், தை பூபதித்திருநாள், பங்குனி ஆதிப்ரஹ்மோத்ஸவம் ஆகியவை.

3) திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் (திருவாய்மொழி 4-4-8) ஆழ்வாரின்  பாசுர சொற்றொடற்கிணங்க, மன்னர்கள் தங்கள் பிறந்த நக்ஷத்ரத்தில் அழகிய மணவாளனை திருத்தேரில் எழுந்தருளப் பண்ணி ப்ரஹ்மோத்ஸவம் கண்டனர்.

4) அதன்படி விஜயநகர மன்னர்களில் ஒருவரான வீரபூபதிஉடையார் (இவன் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்த புக்கரின் பேரன்) தன்னுடைய ஜன்ம நக்ஷத்ரமாகிய தை புனர்பூசத்தில் இந்த ப்ரஹ்மோத்ஸவத்தை கி.பி. 1413ஆம் ஆண்டு ஏற்படுத்தி வைத்தான்.
5) இதற்கான கல்வெட்டு ஆதாரம் 2ஆம் திருச்சுற்றான ராஜமகேந்திரன் திருச்சுற்றின் தெற்குப்பக்கச் சுவரில் அமைந்துள்ளது. கல்வெட்டு எண் அ.கீ. Nணி. 59 / 1938-39.
6) இந்தக் கல்வெட்டு 14-7-1413ஆம் நாள் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.
7) “ விரோதி வருஷம் வைகாசி மாதம் ஜ்யேஷ்ட சுத்த பஞ்சமியும் வெள்ளிக்கிழமையும் அமைந்த நாளில் ஸ்ரீமஹாமண்டலேச்வர வீரபூபதி உடையார் பெருமாள் ஸ்ரீரங்கநாதனுக்கு எழுதிக் கொடுத்த பட்டயம் என்று இந்தக் கல்வெட்டு தொடங்குகிறது.
8) இந்த உத்ஸவத்தைக் கொண்டாடுவதற்காக முதலில் 80 பொன்னும், அதன் பிறகு விஜய வருஷம் 55 பொன்னும் ஸ்ரீபண்டாரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.
9) இந்த உத்ஸவத்தை நன்றாக நடத்தி வைக்கும் பொறுப்பு உத்தமநம்பிகளைச் சார்ந்தது என்று இந்தக் கல்வெட்டு கூறுகிறது.
10) இந்த உத்ஸவம் நடைபெறும்போது அரண்மனை அதிகாரிகள் குறுக்கீடு செய்யக்கூடாது என்றும் இதில் கண்டுள்ளது.
11) விருப்பன் திருநாள் போலே இந்த ப்ரஹ்மோத்ஸவத்தைக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடும் இந்தக் கல்வெட்டு வீரபூபதி உடையாரின் விருப்பமாக திருத்தேரிலே  நம்பெருமாள் உபயநாச்சிமார்களோடு எழுந்தருள வேண்டும் என்று தெரிவிக்கிறது. ( விருப்பன்திருநாள் மற்றும் ஆதிப்ரமோத்ஸவத்தில் திருத்தேரில் நம்பெருமாள் மட்டும் எழுந்தருள, தை ப்ரஹ்மோத்ஸவத்தில் உபயநாச்சியமார்களோடு நம்பெருமாள் எழுந்தருள்வதற்குக் காரணம் இதுவேயாகும்)
12) ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவரங்கத்திற்கு எழுந்தருளிய ஆண்டு கி.பி. 1413. அவருடைய நியமனம் கொண்டு இந்த ப்ரஹ்மோத்ஸவம் ஏற்படுத்தி வைக்கப்பட்டதால் மற்றைய உத்ஸவங்களைவிட இது சிறப்புடைய தாகும்.
13) ஸ்ரீமணவாளமாமுனிகள் ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளியிருந்த சமயம் ஒரு தை மாசமாகும். தை உத்திரட்டாதியில் கொடியேற்றம் ஆகி, புனர்பூசத்தன்று திருத்தேரில் எழுந்தருளும் இந்த உத்ஸவத்தைத் தாம் இந்த ஆண்டு தை ப்ரஹ்மோத்ஸவத்தை சேவிக்க இயலாது போயிற்றே என்று அவர் அருளிச் செய்த இரங்கற்பா கீழ்க் கண்டவாறு அமைந்துள்ளது “தேவியருந்தாமும் திருத்தேரின் மேலரங்கர் மேவி விக்கிரமன் வீதிதனிற்–சேவை செயுமந்தச் சுவர்க்கத்தையநுபவிக்கப் பெற்றிலமே யிந்தத்திருநாளிலே யாம்”.

தொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர். ***

Advertisements